செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள கோயில் நிலப்பிரச்னையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன் (46), துப்பாக்கிச்சூடு நடத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன் உள்ளிட்ட 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, இதயவர்மன் உள்ளிட்ட 11 பேரும் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன் உள்ளிட்ட 11 பேருக்கு நிபந்தனை பிணை அளித்தார். இதனிடையே, இதயவர்மன் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு ரூ.3 லட்சம் நன்கொடையாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதனுடன், இதயவர்மன் மட்டும் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் வடக்கு காவல்நிலையத்திலும், மற்ற 10 பேரும் திருப்போரூர் காவல் நிலையத்திலும் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அதன்படி சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன் இன்று (ஆகஸ்ட் 9) வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் காலை சுமார் 10.30 மணி அளவில் நேரில் சென்று கையெழுத்திட்டார். இதைப் போல, மாலை நேரத்திலும் கையெழுத்திட உள்ளார். தற்போது கையெழுத்திட வேலூர் வந்துள்ள அவர் கிரீன் சர்க்கிள் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார்.
தற்போது தங்கியுள்ள ஹோட்டல் முகவரியை வடக்கு காவல் நிலையத்தில் நேற்று (ஆகஸ்ட் 8) மாலை சமர்ப்பித்துள்ளார். இன்று முதல் அவர் தினமும் இரண்டு வேளை கையெழுத்திட வேண்டும், அவர் தங்கியிருப்பதை வடக்கு காவல்நிலைய காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கை மீறிய எம்.எல்.ஏ.வுக்குப் பிணை!