செங்கல்பட்டு: அருண்குமார் பாதுரி, காரக்பூர் ஐ.ஐ.டி.யில், உலோகவியல் பொறியியலில் பட்டம் பெற்றவர். மேலும் அதே துறையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். ட்ரோம்பேயிலுள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில், 1983ஆம் ஆண்டு சேர்ந்தார். அங்கு பயிலும் போது, 27வது பேட்ச்சை சேர்ந்த இவர், ஒட்டுமொத்த. ஹோமி பாபா பதக்கம் பெற்றவர்.
கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்த இவர், தன்னுடைய சிறப்பான பணியின் காரணமாக இயக்குனர் பதவிக்கு உயர்ந்தார். 2017 ஆம் ஆண்டிலிருந்து 2021 வரை இயக்குனராக திறம்பட பணியாற்றிய பாதுரி, முதுநிலை பேராசிரியராகவும் விளங்கினார்.
இவர் துறை சார்ந்த 270 படைப்புகளை எழுதியுள்ளார். 400க்கும் மேற்பட்ட மாநாடுகளில் உரையாற்றியுள்ளார். மேலும், அணு ஆராய்ச்சி மையத்தின் சார்பாக, இரண்டு சர்வதேச காப்புரிமைகள் பெறப்படுவதற்குக் காரணமாகவும் இவர் இருந்துள்ளார். பாலாற்றின் குறுக்கே வாயலூர் அருகே தடுப்பணை கட்டப்பட்டு, அப்பகுதி மக்களின் விவசாயத்திற்கு பேருதவி புரிந்ததில் பாதுரியின் பங்கு முதன்மையானதாகும்.
இந்நிலையில், கடுமையான மாரடைப்பு காரணமாக, அருண்குமார் பாதுரி, நேற்று ஏப்ரல் 27-ஆம் தேதி, கல்பாக்கத்தில் உயிரிழந்தார். . இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இவரின் உயிரிழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்... மின்வெட்டுக்கு வாய்ப்பா...?