செங்கல்பட்டு : காஞ்சிபுரத்திலிருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டமான செங்கல்பட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று(ஆகஸ்ட். 7) நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஆ.ராகுல்நாத் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் ஆட்சியர் கூறுகையில் “தேர்தல் நடத்தை விதிகளை முற்றிலுமாகக் கடைபிடித்து எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் நடத்தவுள்ள பரப்புரை கூட்டம் குறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் கண்டிப்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். அனுமதி பெற்றப்பின்னரே கூட்டத்தை நடத்த வேண்டும். ஆவணங்களுடன் இணைய வழியில் விண்ணிப்பிக்கலாம்.
வாக்குப்பதிவு தினத்தில் தேர்தல் பணி அலுவலர்கள் அமைதியான முறையில் வாக்குப் பதிவை நடத்தி முடிக்க, அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசுப் பொது கட்டடங்களில் எழுதவோ, போஸ்டர்கள் ஒட்டவோ கூடாது" என்றார்
வரைவுப் பட்டியல் வெளியீடு
இதனைத் தொடர்ந்து ஆட்சியர், வாக்குகளைப் பதிவு செய்ய, எட்டு ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகளில், வார்டு வாரியாக அமைக்கப்படவிருக்கும், 2 ஆயிரத்து 10 வாக்குச் சாவடிகளின் வரைவுப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இந்த வரைவுப் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், வரும் 9ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். வரைவுப் பட்டியல், அனைத்து ஊராட்சி ஒன்றிய, கிராம ஊராட்சிகளில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் மீது ஆட்சேபனைகள், கருத்துக்கள் ஏதாவது இருப்பின், அவற்றை வட்டார வளர்ச்சி அலுவலரிடம், எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.