சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில், நேற்று (ஜூலை.30) வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அதில் நோய் தொற்று அதிகம் பரவும் இடங்கள், மார்க்கெட் பகுதிகள், சந்தைப் பகுதிகள் மூடப்பட வேண்டும் என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு சென்னையில் முக்கிய வர்த்தக பகுதிகள் மூடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மார்க்கெட் பகுதி அதிக மக்கள் கூடும் இடமாக உள்ளது. எனவே சென்னை மாநகர் காவல் துறை ஆணையர் அறிவுறுத்தலின்படி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தாம்பரம் மார்க்கெட் பகுதியையும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தாம்பரம் மார்க்கெட் பகுதியை சுற்றி காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சென்னை புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள நிலையில், அங்கு நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் வியாபாரிகளுக்கு மாற்று இடம் தருவது குறித்து இன்று (ஜூலை.31) தாம்பரம் நகராட்சியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனை நடைபெறுகிறது. அதன் பிறகு மாற்று இடங்கள் குறித்து தெரிவிக்கபடும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஷாப்பிங் மாலில் இளம் நடிகைக்கு நேர்ந்த சோகம்: விசாரணையை தொடங்கிய போலீஸ்!