செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது வேப்பஞ்சேரி கிராமம். அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இந்த கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வரும் குழாய்கள், குடிநீர் தொட்டி ஆகியவை பல ஆண்டுகளாக சுத்தம்செய்யப்படாமல், போதிய பராமரிப்பின்றி சுகாதாரமற்று காணப்படுகிறது.
இவற்றின் வழியாக விநியோகிக்கப்படும் குடிநீரைக் குடிக்கும் நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர். இதனால் பல்வேறு நோய்களும், தொற்றுநோய்களும் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இந்தக் குடிநீரைக் குடிக்கும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும், யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறுகின்றனர். ஊராட்சி நிர்வாகம், கிராமத்தலைவர் உள்ளிட்டோரும் இதுபற்றி கண்டுகொள்ளவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.
அடிப்படைத் தேவையான குடிநீர் விநியோகத்தில் அலுவலர்கள் அலட்சியம் காட்டுவது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க திமுக தீர்மானம்!