செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட ஆறு தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.7) அன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில், வங்கக்கடலில் வருவான 'மிக்ஜாம் புயல்' காரணமாக பல்வேறு மாவட்டங்களில் டிச.2 முதல் அதிக கனமழை பெய்யத் தொடங்கியது. இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இப்பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், மாநகரின் பல பகுதிகளில் உள்ள குடியிருப்புகளையும் சூழ்ந்தது. இதனால், மக்கள் அன்றாட பணிகளுக்கு கூட வெளியே வர முடியாமல் கடுமையான இன்னல்களை சந்திக்க நேரிட்டது. இதற்கிடையே, அந்தந்த மாநகராட்சி சார்பில் மோட்டார்களைக் கொண்டு தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் பாதிப்பு..! உதவி மையத்தின் வாட்ஸ் அப் எண்கள் அறிவிப்பு!
இந்நிலையில், பல பகுதிகள் இடுப்பளவிற்கும் அதிகமாக தேங்கிய மழைநீரில் அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இது போன்ற மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகள் மூலமும், ஹெலிகாப்டர் மூலமும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவைகளுக்கிடையே, பல தனியார் தொண்டு நிறுவனங்களும், அரசியல் இயக்கங்களும் இணைந்து மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை அந்தந்த பகுதி பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் விரைந்து பணிகளை முடிக்க ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, படிப்படியாக ஒவ்வொரு பகுதியாக மின் விநியோகம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்திய மிக்ஜாம் புயல் பாதிப்புகள் மற்றும் மீட்புப் பணிகள் காரணமாக செங்கல்பட்டில் (நாளை) டிசம்பர் 7ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் பாதிப்பு.. பள்ளிக்கரணையில் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்!