செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சிறுதாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னப்பன். இவரது மனைவி பிரியா (21). நேற்று காலை 10.30 மணிக்கு பிரசவத்திற்காக அச்சரப்பாக்கம், ஒரத்தி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்காமல் காலதாமதம் செய்து, பின்னர் பிற்பகல் 3.00 மணிக்கு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பிரியா உயிரிழந்தார். அவர் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துள்ளது. பிரியாவின் இறப்புக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரின் அலட்சியம்தான் காரணம் எனவும், கர்ப்பிணிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் எனவும்கூறி, அவரது உறவினர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து வந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:நெடுஞ்சாலையில் குழந்தையை பெற்ற கர்ப்பிணி - 150 கிமீ நடந்த அவலம்!