செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தாலிக்கு தங்கம் வழங்குதல், மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கலந்துகொண்ட தமிழ்நாடு வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் மாநில அரசுக்கு வரவேண்டிய வரிகளை மத்திய அரசு தட்டிப் பறித்துக் கொள்கிறது என்ற அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு குறித்த கேள்விக்கு, மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் மீது செஸ், சர்சார்ஜ் போன்றவற்றை மத்திய அரசு கூடுதலாக விதித்து வருவதாகவும், மாநில அரசுக்கு முறைப்படி வரவேண்டிய வரி வருவாயை செஸ்,சர்சார்ஜ் போன்ற வரியின் மூலம் மத்திய அரசு தட்டிப்பறிக்கிறது என்று பதிலளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு எந்த எந்த துறை மத்திய அரசின் கீழ் வருகிறது, எந்த எந்த துறை மாநில அரசின் கீழ் வருகிறது என்று தெரியாமல் உள்ளதாக குற்றஞ்சாட்டிய அமைச்சர், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து ஸ்டாலின் மத்திய அரசிடம்தான் கேள்விகேட்கவேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்கும் கேள்வியைத்தான் தாங்களும் தமிழ்நாடு அரசு சார்பாக மத்திய அரசிடம் வேண்டுகோளாக வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில், மத்திய அரசை அமைச்சர் குற்றஞ்சாட்டி பேசியது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: சாலை ஓரம் துள்ளித் திரியும் புள்ளிமான்கள் பாதுகாக்கப்படுமா?