செங்கல்பட்டு: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள மாம்பழப்பட்டு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு, கட்டட வேலைக்குக் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக வந்துள்ளார். இவருடன், இவரது ஊரான மாம்பழப்பட்டுவைச் சேர்ந்தவரும் இங்குப் பணிக்கு வந்து தங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை வெகுநேரமாகியும் இருவரும் வெளியே வராததால், உடன் பணியாற்றுபவர்கள் அவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது, கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட நிலையில் அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து வந்த செங்கல்பட்டு காவல் துறையினர், பெண்ணின் உடலைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர். காவல் துறையின் முதல்கட்ட விசாரணையில் அவர்கள் இருவருக்கும் பல ஆண்டுகளாக, திருமண பந்தத்திற்கு வெளியேயான உறவு இருந்துவந்ததாகத் தெரிகிறது.
அந்தப் பெண் கொலைசெய்யப்பட்டு கிடந்த நிலையில், அந்த நபர் தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது. அவரைத் தேடிக் கண்டுபிடித்து விசாரித்தால்தான், கொலைக்கான முழுக் காரணம் தெரியும் என்று, காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:சென்னை பாண்டிபஜாரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து!