தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 43 ஆர்.சி. புத்தகம் காணாமல்போன விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் அலுவலகத்தின் கதவை அடித்து உடைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
தாம்பரம் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து ஆணையர் தலைமையில் அலுவலர்கள் நடத்திய ஆய்வில் 43 வாகன ஆர்.சி.புத்தகங்கள் மாயமாகியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள் பாலாஜி, லட்சுமிகாந்த், காளத்தி மற்றும் ஆர்.டி.ஓ. உதவியாளர், இளநிலை உதவியாளர் என 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தாம்பரம் காவல்நிலையத்தில் காண்காணிப்பாளர்கள் பாலாஜி, காளத்தி, கிளர்க் தாமோதரன், எழுத்தர் சாந்தி, மற்றும் வெளிநபர் ரமேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்தும் 43 ஆர்.சி.புத்தகத்தை கண்டுபிடித்து தரவும் புகார் அளித்தனர்.
இந்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வரும்நிலையில், சம்பந்தபட்டவர்கள் 43 பேருக்கும் புதிதாக ஆர்.சி.புத்தகம் வழங்கப்பட்டது. அதனால், எவ்விதப் பிரச்னையும் இல்லை; பழைய ஆர்.சி.புத்தகம் காலாவதியாகி விடும் என அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் பணியிட நீக்கம் செய்யப்பட்ட பாலாஜி என்பவர் நேற்று (ஆக.18) மாலை தனது நண்பர்களுடன் தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்திற்குச் சென்று தகராறில் ஈடுபட்டு, உருட்டுக்கட்டையால் ஆர்டிஓ அலுவலகத்தின் கதவு மற்றும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து சேதப்படுத்தினார்.
மேலும், அங்கிருந்தவர்கள் அவரை சமரசம் செய்தும் அவர் கேட்காமல், அவர்களையும் தகாத வார்த்தைகளால் வசைப் பாடி சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாம்பரம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குஜாத்தில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். தினேஷ் குண்டு ராவ் கேள்வி