செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் அண்ணன், தம்பிகளான வெங்கடேசன் (30), சந்திரன்(27). நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்களான இவர்கள் ஒரே வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்களில் தம்பியான சந்திரன் கொக்கு, குருவி போன்றவைகளை வேட்டையாடி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். அண்ணனான வெங்கடேசன் மாமல்லபுரத்தில் பாசிமணி வியாபாரம் செய்து வந்தார்.
ஒரே வீட்டில் வசித்து வந்த இருவருக்கும் வீட்டை பங்கு பிரிப்பதில் கடந்த 5 வருடங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்ணன் வெங்கடேசன் தம்பி சந்திரனுக்கு, வீட்டின் பின்புறம் உள்ள அவர்களின் தந்தையின் பூர்வீக இடத்தில் 2 சென்ட் நிலம், 2 சவரன் நகை, 50 ஆயிரம் பணம் ஆகியவற்றைத் தருவதாக கூறியுள்ளார்.
அதற்கு சந்திரன் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது உள்ள வீட்டில் தனக்கு பாகம் இருப்பதாகவும், தான் வெளியில் சென்று வசிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்தச் சூழ்நிலையில் நேற்று ( மார்ச் 31 ) நள்ளிரவில் முழு மதுபோதையில் வீட்டில் இருந்த தம்பி சந்திரன் மீண்டும் அண்ணன் வெங்கடசேனிடம் தகராறு செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்த வெங்கடேசனை எழுப்பி மீண்டும் தகராறு செய்த சந்திரன், தான் தயாராக வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வெங்கடேசனை சுட்டதாகத் தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் துடிதுடித்து இறந்தார்.
இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கழுக்குன்றம் காவல் துறையினர் அண்ணனை துப்பாக்கியால் சுட்ட தம்பி சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வெங்கடேசன் உடலை உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கொத்திமங்கலம் நரிக்குறவர் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பைக் டாக்சி ஓட்டுநரை சரமாரியாக அடித்த ஆட்டோ ஓட்டுநர்.. சென்னை கோயம்பேட்டில் நடந்தது என்ன?