சென்னையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிறுமி: 23ஆவது மாடியில் சாகசம் - 15 year old girl video
செங்கல்பட்டு: 'ஸ்பைடர் மேன்' படத்தில் வருவதுபோன்று 25 மாடி கட்டடத்தின் வெளிப்புற விளிம்பில் 15 வயது சிறுமி நடந்து சென்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், பழைய மாமல்லபுரம் சாலை நாவலூர் பகுதியில் ஹிரானந்தினி என்ற பிரமாண்டமான 25 மாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பின் 23ஆவது மாடியின் வெளிப்புற விளிம்பில் சிறுமி ஒருவர் நடந்து சென்று பீதியை ஏற்படுத்தியுள்ளார். 23 மாடியில் ஸ்பைடர் மேன் போன்று பெண் ஒருவர் தலைவிரி கோலத்துடன் நடந்து சென்றார். இதனைப் பார்த்த சிலர் ஏதோ உருவம் தெரிவதைக் கண்டு அதிர்ந்து போனார்கள்.
அந்தப் பெண் மூன்று முறை விளிம்பில் சுற்றியுள்ளார். இதனை மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனை வைத்து விசாரித்தில் இந்த விபரீத செயலில் ஈடுபட்டது 15 வயது சிறுமி என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து பெற்றோரிடம் காவல்துறையினர் கேளம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில் அண்ணன் தங்கை இருவருக்கும் ஏற்பட்ட போட்டியில் யாருக்கு தில் அதிகம் என்பதை நிரூபிக்க கடந்த 15 நாள்களுக்கு முன்பு இதுபோன்று விபரீத செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். மீண்டும் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்வதாக பெற்றோர் வருத்தம் தெரிவித்ததால் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
சாகசம் என்ற பெயரில் இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபடக்கூடாது என்றும் இது போன்ற செயல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மிகக் குறைந்த விலைக்கு பட்டுக்கூடு கொள்முதல்: வேதனையில் விவசாயிகள்!