செங்கல்பட்டு: மதுராந்தகம் புறவழிச்சாலை அருகே, அனைத்துக் கட்சியினரும் மிகப் பிரமாண்டமாக தங்களது கட்சிக் கொடிகளை நட்டு வைத்துள்ளனர். போட்டி போட்டுக்கொண்டு, குறைந்தது 100 அடி உயரம் உள்ள பல கட்சிகளின் கொடிக்கம்பங்கள் இங்கு நடப்பட்டுள்ளன. இதில் அதிமுக சார்பாக நடப்பட்ட 100 அடி உயரம் உள்ள கொடிக்கம்பத்தில், கொடி சேதம் அடைந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, மதுராந்தகம் பகுதியில் உள்ள அதிமுகவினர், இன்று(டிச.15) அந்தக் கொடியை மாற்றி வேறு கொடியை கிரேன் மூலம் கட்டியுள்ளனர். கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக, அந்தப் பகுதியில் மண் நெகிழ்ந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் எதிர்பாராத விதமாக பிரமாண்டமான அந்த கொடிக்கம்பம் அடியோடு பெயர்ந்து சாய்ந்தது. அப்போது அருகே நின்று கொண்டிருந்த மதுராந்தகம் சூரக்கோட்டை பகுதியைச்சேர்ந்த செல்லப்பா என்பவர் மீது அந்த கொடிக் கம்பம் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே செல்லப்பா பரிதாபமாக உயிரிழந்தார். மதுராந்தகம் காவல் துறையினர் செல்லப்பாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மானுடன் தர்ஹா சென்ற நடிகர் ரஜினிகாந்த் - வீடியோ வைரல்