செங்கல்பட்டு: தாம்பரம் காவல் ஆணையரகத்தில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலர்கள் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக மகிதா அண்ண கிருஷ்டி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்புதான் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்துள்ளார். இவர் புகார் தர வரும் நபர்களிடம் வழக்குப் பதிவு செய்யாமல், சமரசம் செய்து வைத்து கணிசமான தொகை பார்த்து வருவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது.
இந்த நிலையில் 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி, ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியின் தாய் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த ஆய்வாளர் மகிதா, இதில் சம்பந்தப்பட்ட திரிசூலம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (27) என்பரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தார்.
பின்னர் அந்தச் சிறுமிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது சிறுமிக்கு ஏற்கனவே கருக்கலைப்பு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் சிறுமியின் தாயாரிடம் விசாரணை செய்தபோது தனியார் கிளினிக் ஒன்றில் கருக்கலைப்பு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் அந்த கிளினிக்கை நடத்தி வரும் மருத்துவர்கள் உமா மகேஸ்வரி மற்றும் பராசக்தி ஆகியோரிடம் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த விவகாரத்தில் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி பராசக்தியிடம் 10 லட்சம் ரூபாய் மற்றும் உமா மகேஸ்வரி இடம் இரண்டு லட்சம் ரூபாய் என மொத்தம் 12 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார், மகிதா அண்ண கிருஷ்டி.
இதில் பராசக்தி, அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா தன்னை மிரட்டி மேலும் பணம் கேட்பதாக தாம்பரம் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் காவல் ஆணையர் அமல்ராஜ் மகிதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். பின்னர் இந்த விவகாரம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணியிடை நீக்கம் செய்த கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய மகிதா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மறைமலைநகர் தனிப்படை போலீசார் நேற்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மகிதா அண்ண கிருஷ்டியை கைது செய்து மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வழக்கறிஞர் பன்னீர்செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
அதேபோல் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட நான்கு பேர் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த ஒரகடம் பகுதியில் டீக்கடையில் தின்பண்டங்கள் சாப்பிட்டுவிட்டு, பணம் கொடுக்காமல் கடை உரிமையாளரை மிரட்டிய வழக்கில் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒடிஷாவில் பயங்கரம்: 14 வயது சிறுவன் நரபலி? - பெண் சாமியார் உள்பட 4 பேர் கைது!