செங்கல்பட்டு: தாம்பரம் கன்னடபாளையம் குப்பைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ப்ரியா. கணவனை இழந்த இவருக்கு 3 ஆண் பிள்ளைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் கோகுல்ஶ்ரீ. கடந்த டிசம்பர் மாதம் கோகுள்ஸ்ரீ மீது தாம்பரம் ரயில்வே போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு கூர்நோக்கு சிறையில் அடைத்தனர்.
அதன் பிறகு சீர்திருத்த ப்பள்ளியில் ஒப்படைக்கப்பட்ட மறுநாள் கோகுல்ஸ்ரீக்கு வாந்தி மற்றும் வலிப்பு ஏற்பட்டதாகவும், அதனால் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்ததாகவும் தகவல் வெளியானது. அதன் பின் அந்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் கோகுல் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியதாகவும் கோகுலின் தாய் ப்ரியாவிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுவனின் உடலை பார்க்க விடமால் அலைக்ககழித்ததாகவும், பிறகு அவரை கூர்நோக்கு இல்லத்தைச் சேர்ந்த சிலர் அதே இல்லத்தில் பணிபுரியும் ஒரு பெண்மணியின் அக்காவான சாந்தி என்பவர் வீட்டில் அடைத்து வைத்து மிரட்டியதாகவும் கூறப்பட்டது.
இதனை அடுத்து சிறுவனின் தாய் ப்ரியா, தன் மகனின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து இருந்தார். இதைத் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் இருந்த சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக செங்கல்பட்டு நகரப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், குறிப்பிட்ட ஒரே ஆயுதத்தைக் கொண்டு தாக்கியதின் விளைவாகவே, சிறுவன் உயிரிழப்பு நடைபெற்றது என்பது தெரிய வந்தது.
அதன் அடிப்படையிலும், நீதிபதியின் அறிக்கையின் அடிப்படையிலும் செங்கல்பட்டு நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், குறிப்பிட்ட கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர் கூர்நோக்கு கண்காணிப்பாளர் மோகன், பணியில் இருந்த காவலர்கள் சந்திரபாபு, வித்யாசாகர், சரண்ராஜ், ஆனஸ்ட் ராஸ், விஜயகுமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், டிஎஸ்பி பரத் தலைமையில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கைது செய்த போலீசார், அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைத்தனர். அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை அடுத்து தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், பிரியா குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. மேலும் குடிசை மாற்று வாரியத்தில் ப்ரியாவுக்கு வீடு ஒன்றும் ஒதுக்கப்பட்டது.
இந்த வழக்கை போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில் தற்பொழுது இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கூர்நோக்கு இல்லத்தில் சிறுவனை அடித்துக் கொன்ற ஆறு பேர் கைது