செங்கல்பட்டு மாவட்டம் நல்லம்பாக்கம், சிவன் கோயில் அருகே உள்ள ஏரிக்கரையில் இரு தரப்பிரனிடையே ஏற்பட்ட மோதலில் தேவா(21) என்ற இளைஞர் கத்தி, கட்டையால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொலை செய்த கும்பல் தப்பியோடியது. இதுகுறித்து தகவலறிந்த தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பியோடியவர்களை பிடிக்க தாழம்பூர் ஆய்வாளர் வேலு தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனிடையே கீரப்பாக்கம் கிரஷர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நான்கு பேரை போலீசார் தடுத்து நிறுத்திய போது அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில் கைது செய்யபட்டவர்கள் மேலக்கோட்டையூரை சேர்ந்த சுதர்சன்(எ) சுனில்(22), நெடுங்குன்றத்தை சேர்ந்த ரத்தினம்(22), இசக்கிவேல்(19), கண்டிகையை சேர்ந்த ராஜேந்திரன்(19) என்பது தெரியவந்தது. அதோடு கண்டிகையை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனுக்கும், நல்லம்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கும் அப்பகுதியை சேர்ந்த சிறுமியின் மஞ்சள் நீராட்டு விழாவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக, தேவாவிடம் அந்த சிறுவன் தெரிவித்துள்ளான். அதனடிப்படையில் தேவா, சுனிலை செல்போனில் அழைத்து பேசிய உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதை பேசி தீர்த்துக்கொள்ள நேற்று மாலை சம்பவயிடத்தில் இருதரப்பும் சந்தித்துள்ளது. அப்போது ஏற்பட்ட கைகலப்பில் மேற்கூறிய 4 பேரும் தேவாவை அடித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணம் செய்து வைப்பதாக அழைத்துச் சென்று ஆணவக்கொலை செய்த குடும்பம்... உடல்களை ஆற்றில் வீசப்பட்ட கொடூரம்...