தலைநகர் சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் போர்க்கால அடிப்படையில் ஜோலார்பேட்டை காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட உபரி நீரை சென்னைக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டது.
அதன்படி, காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட உபரி நீரை சென்னைக்கு கொண்டுவர மேட்டுசக்கரகுப்பம் பம்புஹவுஸ் எனப்படும் நீர்த்தேக்க தரைமட்ட தொட்டியிலிருந்து 3.5 கிலோ மீட்டர் தூரம் புதைக்கப்பட்ட ராட்சத குழாய்கள் மூலம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, சென்னைக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து சென்னை வில்லிவாக்கத்திக்கு ரயில் மூலம் குடிநீர் வந்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். ஒரு சிலர் ரயில் முன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டர். ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட குடிநீரானது கால்வாய் மூலம் கீழ்பாக்கத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
பின்பு மத்திய சென்னைக்கு உட்பட்ட அயனாவரம், திருவல்லிக்கேணி, அண்ணாநகர், எழும்பூர் ஆகிய பகுதிகளுக்கு லாரி மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.