இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலளார் டிடிவி தினகரன் பேசுகையில்,
"இன்று நான் சட்டப்பேரவையில் பேச அனுமதி கேட்கவில்லை. வரும் நாட்களில் பேசுவேன். ஆர்.கே.நகர் தொகுதியை முழுவதுமாக தமிழ்நாடு அரசு புறக்கணித்து வருகிறது. மக்கள் அவர்களை ஆதரிக்கவில்லை என்பதால் அடிப்படை வசதிகள் கூட செய்து தருவதில்லை" என்றார்.
"நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த அடுத்த நாள் ஏப்ரல் 19ஆம் தேதி அமமுக கட்சியைப் பதிவு செய்வது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், எம்.எல்.ஏ ரத்தின சபாபதி, எம்.எல்.ஏ கலைச்செல்வன் ஆகியோர் பங்குகேற்றனர். ஆனால், நீங்கள் இதில் கையெழுத்திட்டால் அதிமுக எம்.எல்.ஏ பதவி பரிபொய்விடும் என நான் கூறினேன். தற்போது அவர்கள் பேசுவது யார் சொல்லி என்று தெரியவில்லை. பதவியைத் தக்கவைத்துக்கொள்ள இருவரும் அதிமுக சென்றுள்ளனர். அது தவறு ஏதும் இல்லை" என்று கூறினார்.
சமீபத்தில் திமுகவில் சேர்ந்த தங்க தமிழ்செல்வனின் பெயரைக் குறிப்பிடாமல், "தேர்தல் தோல்விக்குப் பின்பு சில நிர்வாகிகள் வேறு கட்சிகள் சென்றுள்ளனர். இதை பொதுமக்கள் மத்தியில் அமமுக வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதைப்போன்ற பிம்பத்தை ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினர் உருவாக்கி வருகின்றனர். சில நிர்வாகிகள் செல்வதால் இயக்கம் வீழ்ச்சி அடையும் என்றால் அது பொய் என்று தொண்டர்கள் விரைவில் நிரூபிப்பார்கள்" என்றார்.