ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதற்கு, படிக்க வேண்டிய தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பினை முடித்திருக்க வேண்டும். இதற்கான மாணவச் சேர்க்கை தற்பொழுது நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி; பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ‘அரசு உதவிபெறும், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவச் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. இப்பட்டயப் படிப்பில் சேர்வதற்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பொதுப்பிரிவினர் 50 விழுக்காடு மதிப்பெண்களும், பிற வகுப்பினர் 45 விழுக்காடு மதிப்பெண்களும் பெற வேண்டும்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். மாணவச் சேர்க்கை 10.6.2019 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு, பிற விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி; பயிற்சி நிறுவனத்தின் இணைப்பு அனுமதி, ஆசிரியர் பணியாளர் பட்டியல் ஒப்புதல் பெறாத நிறுவனங்கள் அல்லது ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியல் ஒப்புதல், சேர்க்கை ஒப்புதல், இணைப்பு அனுமதியை இடையில் இழந்த நிறுவனங்கள் ஆகியவற்றில் மாணவர்கள் சேர்க்கப்படமாட்டார்கள்.
இந்த நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் தங்களின் படிப்பினை அந்நிறுவனத்தில் தொடர்ந்து படிக்க முடியாது. அவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்படும். மேலும் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் பட்டியலை http://www.tnscert.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.