பாலியல் தொடர்பான புகார்கள் குறித்த உதவிகளை செய்வதற்கென பிரஜன்யா அறக்கட்டளை செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பை நடத்திவரும் நிர்வாகியான சுவர்ண ராஜகோபாலன் சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தொடர்பாக பேசிய அவர், “தலைமை நீதிபதி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் திடீரென்று ஏன் பின்வாங்கினார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக அறிக்கை விவரம் யாருக்கும் கொடுக்கப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே பல குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புகார் அளித்தவருடன் வழக்கறிஞர் வரக்கூடாது என்று சொன்னது விசாரனை குறித்த நோக்கத்தை சந்தேகப்பட வைக்கிறது.
ரஞ்சன் கோகாய் மீதான புகாரில் விசாகா சட்டம் தொடர்பாக எந்த நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. அனைத்துத் துறை அலுவலகங்களிலும் விசாகா சட்டத்தின்படியான பாலியல் ரீதியான பாதிப்புகள் குறித்து விசாரணை குழு அமைத்தல் வேண்டும். அக்குழுவில் பெரும்பான்மையாக பெண்கள் இருக்க வேண்டும். இதற்காக குழுக்கள் அமைக்கத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் விசாகா குழு அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், அக்குழுவிற்குக் கூட இவ்விவகாரம் கொண்டுசெல்லப்படாமல் தலைமை நீதிபதி மீது தவறில்லை என்கிற முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என்றார்.