ஆரம்பத்தில், இந்த விவகாரத்திற்குப் பின்னால் இத்தனை அதிர்ச்சித் தகவல்கள் மறைந்திருப்பதை - பொதுவாக இந்தச் செய்தியை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனங்களே நினைத்திருக்காது. ஏனெனில், பாலியல் வன்கொடுமையாக தொடங்கிய இந்த விவகாரம், பாலியல் பயங்கரவாதமாக தற்போது அறியப்படுகிறது.
முதலில் ஒரு இளைஞர், பொள்ளாச்சி காவல் நிலையத்தில் தனது தங்கைக்கு 4 இளைஞர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஒரு ரகசியப் புகாரை அளிக்கிறார். அந்த புகார் காவல் நிலையத்தில் உள்ள கடைநிலை காவலரைச் சென்றடைவதற்கு முன்னரே, புகாரில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்துவிடுகிறது. அதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களாலேயே புகார் கொடுத்த இளைஞர் தாக்கப்படுகிறார்.
இந்த வழக்கில் அந்த இடத்திலேயே அரசியலும் நுழைந்துவிட்டது. ஏனெனில், புகார் கொடுத்த நபரை தாக்கியதாக கைது செய்யப்பட்டவர் பொள்ளாச்சி 34ஆவது வட்ட அம்மா பேரவைச் செயலாளர் ‘பார்’ நாகராஜ். இவருக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை என பொள்ளாச்சி மக்கள் குழம்பியிருந்த நேரத்தில், ஒரு தகவல் பொள்ளாச்சி முழுவதும் பரவத் தொடங்குகிறது. அந்தத் தகவல் என்னவென்றால், பொள்ளாச்சி அதிமுக எம்.எல்.ஏ.வும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் இரு மகன்களுக்கும் இந்த விவகாரத்தில் நேரடியாக தொடர்பிருப்பதால், அதை மூடி மறைக்கவே பார் நாகராஜ் ஏவப்பட்டார் என்பதுதான்.
இதற்கிடையே, போலீசாருக்கு கிடைத்த ரகசிய வீடியோக்களை நக்கீரனும் விகடனும் எந்த தரப்பிடமோ புலனாய்வு செய்து பெற்று, அதனை சமூகவலைதளங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்தன. அதன்பின்னரே, இந்த விவகாரம் காட்டுத் தீ போல் பரவத் தொடங்கியது.
அதே நேரம், பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ‘பார்’ நாகராஜ் பிணையில் வெளியாகிறார். அவரை பிணையில் எடுத்தது சென்னையில் இருந்து விமானம் மூலம் வரவழைக்கப்பட்டிருந்த ஒரு வழக்கறிஞர். (கோவை பார் கவுன்சிலில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்காக ஆஜராக மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததால், இந்த ஏற்பாடு)
உள்ளூர் அரசியல் பிரமுகரை ஜாமீனில் எடுக்க விமானத்தில் வழக்கறிஞர் வந்திறங்கியபோதே இந்த விவகாரத்தின் பின்னணியில் பலருக்கும் தொடர்பிருப்பது உறுதியாகிவிட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. இதனையடுத்து, இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். சத்யராஜ், ஜி.வி.பிரகாஷ், சித்தார்த், பா.விஜய் போன்ற திரையுலகினரும் சமூகவலைதளங்கள் மூலம் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது அப்போதுதான். கிட்டத்தட்ட அனைத்து முதன்மை ஊடகங்களிலும் முழு நேர செய்தியாக இந்த விவகாரம் ஒளிபரப்பப் பட்டுக்கொண்டிருந்தது. அதன் விளைவாக, தலைமைச் செயலகத்தில் தேர்தல் ஆணையருடன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த பொள்ளாச்சி ஜெயராமன், இந்த விவகாரத்தில் தன் மகன்களுக்கு தொடர்பில்லை என தன்னிலை விளக்கம் கொடுத்தார்.
அந்த விளக்கம் சென்றடைந்ததைவிட, அந்த செய்தியாளர் சந்திப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் அடைந்த பதற்றம்தான் தமிழக மக்களை எளிதில் சென்றடைந்திருக்கும். இதற்கிடையே, கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட களமிறங்கினர்.
அதிமுகவின் கோட்டையாக விளங்கிய கொங்கு மண்டலத்திலிருந்தே இப்படிப்பட்ட போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், அரசியல் அழுத்தங்களும் வரக்கூடும் என்று எடப்பாடி கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
முதலமைச்சர் தனது அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தியிருந்தால், இந்த விவகாரத்தை மக்கள் மன்றத்தில் வெட்ட வெளிச்சமாக்கியிருக்க முடியும் என்று ஒலிக்கும் குரல்களில் ஒளிந்திருக்கும் ஆதங்கம் நியாயமானதே.
இந்நிலையில்தான், தமிழக காவல்துறைத் தலைவரின் விரிவான விளக்கத்தை தாக்கல் செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அது மட்டுமின்றி, அரசியல் தொடர்பு இல்லாமல் நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மகளிர் ஆணையம் அறிவுறுத்தியது.
சொல்லி வைத்தாற்போல இவ்வழக்கை விசாரிக்கும் கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜ், மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, பொள்ளாச்சி ஜெயராமன் என அடுத்தடுத்து செய்தியாளர்களை எதிர்கொண்ட அனைவரும், ‘இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்பு இல்லை” என்ற வசனத்தை மட்டும் உச்சரிக்கத் தவறவே இல்லை. அது 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற கதையாக இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கிடையே இவ்வழக்கு அவசர அவசரமாக சி.பி.சி.ஐ.டி.யில் இருந்து சி.பி.ஐ.க்கு தமிழக அரசால் மாற்றப்பட்டது. அந்த அரசாணை முழுவதுமாக செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பாகவே, திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.சி.ஐ.டி.போலீசார் சோதனை நடத்தி லேப்டாப், பென் டிரைவ் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதியே சி.பி.ஐ.க்கு மாற்றிட வேண்டும் என மாணவர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று தமிழக அரசும் வழக்கை மாற்றுவது போல் மாற்றிவிட்டு, இந்தப் பக்கம் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியுள்ளது. அதோடு நில்லாமல், 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க பொள்ளாச்சி நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது.
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம், வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதற்கான அரசாணையில், புகார் அளித்த பெண்ணின் பெயர், அவர் படிக்கும் கல்லூரி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அரசு வெளியிட்டதுதான். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதை மீறி எப்படி வெளியிடலாம் என்று சமூக ஆர்வலர்களிடையே இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள மற்ற பெண்கள் புகார் அளிக்க துணியக்கூடாது என்பதற்கான அச்சுறுத்தலாகவே இது இருப்பதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அளவிற்கு பாதிக்கப்ட்ட பெண்களின் அழுகுரல்கள் நம் செவிகளிலும் மாறி மாறி ஒலித்துக் கொண்டே தான் இருக்கின்றன .
"ஃப்ரண்டுன்னு நம்பிதானே வந்தேன்.. என்னை விட்ருங்க.. அண்ணா அடிக்காதீங்க அண்ணா... நானே கழட்டிடறேன்... அண்ணா” என ஒரு பெண் துடிதுடித்தத காட்சிகள் சமூகத்தின் மீதான சவுக்கடி.
இதில் கூட அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள், அவர் அரசியல் செய்கிறார், இவர் அரசியல் செய்கிறார் என சுய நினைவின்றி விவகாரத்தை திசைதிருப்ப முயல்பவர்கள் தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை ஏன் மறந்துவிடுகிறார்கள் என்ற கேள்விக்கு எவரிடத்தில் பதில் கிடைக்கும் என்பதே பெருங்கேள்வியாக இருக்கிறது.
'கயவர்களின் சதிவலையில் சிக்கி, வீடியோ-வை வைத்துக்கொண்டு மிரட்டும் காமுகர்களிடம் அச்சமின்றி “உன் அம்மா, அக்கா, தங்கச்சிக்கு இருக்கிறதுதாண்டா எனக்கும் இருக்கு... ஆனத பாத்துக்கோடா..." எனக் கூறிவிட்டு நடந்தவற்றை தங்களிடம் பகிருங்கள்' என பெற்றோர் தங்களின் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய தைரியம் இந்த இடத்தில் மிகவும் அவசியமாகிறது.