அருணாச்சலம் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஐ.ஐ.டி. பேராசிரியர் டி.மூர்த்தி பெயரில் தாக்கல் செய்த அறிக்கை போலியானது என்றும், டி.மூர்த்தி என்ற பேராசிரியர் சென்னை ஐ.ஐ.டி.யில் பணியாற்றவே இல்லை என்றும் மனுதாரர் அருணாச்சலம் தரப்பு சார்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.
இது தொடர்பாக சீருடைப் பணியாளர் தேர்வாணையம், உரிய பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி.செந்தாமரைக்கண்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் உளவியல் நிபுணரான ஜி.வி.குமார் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசகராக உள்ளார். இவர் ஐ.ஐ.டி. பேராசிரியர் என்று டி.மூர்த்தியை அலுவலர்களிடம் அறிமுகம் செய்து, அவரிடமிருந்து அறிக்கையும் பெற்றுத்தந்தார்.
இந்த விஷயத்தில் ஜி.வி.குமாரும், டி.மூர்த்தியும் சேர்ந்து, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தை ஏமாற்றி உள்ளனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜி.வி.குமாரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை ஏப்ரல் 1ஆம் தேதி கைது செய்தது. கைது செய்யப்பட்ட ஜி.வி.குமார் தாக்கல் செய்த பிணை மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து ஜி.வி.குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு தாக்கல் செய்தார். பிணை மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேசன் மத்திய குற்றப்பிரிவு காவல் துறை ஏப்ரல் 22ஆம் தேதி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.