சென்னை பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மத்திய அமைச்சரும், பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ்கோயல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், எங்கள் கூட்டணிக்கு தமிழ்நாடு மக்களிடம் ஆதரவு உள்ளது. பாஜக தேர்தல் அறிக்கையில் நீர் பிரச்னை தீர்ப்பதாக கூறியுள்ளோம். குறிப்பாக சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது.
இதனால் காவிரி - கோதாவரி இணைப்பு தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாட்டுக்கு பெரிதும் உதவும். தண்ணீருக்காக புதிய அமைச்சகம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
விவசாய மக்களுக்கு சோலார் பவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களது விவசாயமும் வருமானமும் அதிகரிக்கும். மீன்வளத் துறை அமைக்கப்படும். ஆயிரம் கோடியில் மீனவர் நல திட்டங்கள் தொடங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் ஊழல்வாதிகள் எனவும், கார்த்திக் சிதம்பரம் மற்றும் தயாநிதி மாறன் மிகப்பெரிய ஊழலை செய்துள்ளனர் என பியூஷ்கோயல் விமர்சித்துப் பேசினார்.