பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட்ட போதிலும், அவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. இதனால் பெற்றோர்கள் பெண் குழந்தைகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். பிறந்து சில மாதங்களே ஆன பெண் குழந்தைகளிலிருந்து வயதான பெண்களுக்கும் எதிராக வன்முறை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்புணர்வுகள், ஒருதலைக் காதல் விபரீதத்தால் பெண்களின் முகத்தில் திராவகம் வீசுதல், கொலை செய்தல் போன்ற கொடூர சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதில் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்று சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அரங்கேறிய சுவாதியின் கொலை. இது என்றென்றும் ஆறாத வடுவாகவே உள்ளது.
இக்கொலையை மையமாக வைத்து முதலில் சுவாதி கொலை வழக்கு என்ற தலைப்பில் இயக்குநர் ரமேஷ் செல்வன் படத்தை இயக்கினார். இவர் ஜனனம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். ஆனால், இப்படத்தில் பல சிக்கல்கள் ஏற்படவே, படத்தின் தலைப்பை ’நுங்கம்பாக்கம்’ எனவும், கதாபாத்திரங்களின் பெயரை மாற்றியும், காட்சி அமைப்புகள் சிலவற்றை மாற்றியும் படத்தை எடுத்தார். இதனையடுத்து படத்தை வெளியிட இருந்த நிலையில், முதலில் சுவாதியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து, வழக்குத் தொடர்ந்தார். இப்போது தலித் சமூகத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை இயக்குநர் ரமேஷ் செல்வன், தயாரிப்பாளர் ரவிதேவன் ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேசினர். இதையடுத்து இன்று இரவு திருமாவளவன் படத்தை பார்க்க உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இயக்குநர் ரமேஷ் செல்வன் கூறுகையில், இந்தப் படம் சுவாதிக்கோ, ராம்குமாருக்கோ, காவல் துறைக்கு எதிராகவோ எடுக்கப்பட்ட படம் இல்லை என்றும், சுவாதியின் குடும்பத்தைப் பற்றியோ, ராம்குமாரின் குடும்பத்தைப் பற்றியோ ஒரு காட்சியும் இப்படத்தில் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், நாட்டில் இப்படி ஒரு சம்பவம் இனி நடக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தோடுதான் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.