பிப்ரவரி மாதம் காணாமல் போன சூழலியலாளர் முகிலன், நேற்று ஆந்திராவில் மீட்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ராஜேஸ்வரி என்ற பெண் தொடுத்த பாலியல் வழக்கில், இன்று திடீரென கைதுசெய்யப்பட்டார். அவரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, முகிலனின் மனைவி பூங்கொடி மாலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "முகிலனைக் கடத்திய அடையாளம் தெரியாத நபர்கள், சோறு தண்ணீர் கொடுக்காமல் சித்திரவதை செய்துள்ளனர். இதனால் அவர் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உடம்பில் நாய் கடித்த தடம் இருக்கிறது. அதோடு இல்லாமல், அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் சேர்ந்து முகிலனை தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளனர்" என்று பகீர் தகவலை தெரிவித்தார்.
தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் பாலியல் வழக்கைக் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அது முற்றிலும் அவரை முடக்கப் போடப்பட்ட வழக்கு. இம்மாதம் 10ஆம் தேதி நடைபெற இருந்த அணுக்கழிவு கிடங்கு அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. அதில் அவர் பங்கெடுக்கக் கூடாது என்பதற்காகவே, இவ்வழக்கு திட்டமிட்டுக் கோர்க்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.