தமிழ்நாடு முழுமையாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களும் தங்களது வாக்கினை 100 விழுக்காடு செலுத்துவதற்கான சில ஆலோசனைகளையும் ஜாக்டோ ஜியோவின் சார்பாக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
அதில், அஞ்சல் வாக்குகளை பெறுவதற்கான படிவங்களை பூர்த்திசெய்து வழங்கி அலுவலர்களுக்கு வாக்குச்சீட்டுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால் தமிழ்நாட்டில் தேர்தல் வகுப்புகள் நடைபெற்ற மையங்களில் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், இரண்டாம் கட்ட வகுப்புகள் நடைபெற்ற மையங்களில் தேர்தல் வகுப்பினை நடத்தும் அலுவலர்கள் அஞ்சல் வாக்குச்சீட்டுகள் கிடைக்காத 95 விழுக்காடு தேர்தல் பணி அலுவலர்களை மீண்டும் படிவம் 12 பூர்த்தி செய்து அஞ்சல் வாக்குகளை பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இதனால் தேர்தல் வகுப்புகள் நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையானது நூறு விழுக்காடு வாக்குப்பதிவு என்ற இலக்கினை எய்துவது என்பதற்கு முற்றிலும் முரணாக தோன்றுகிறது.
மேலும், அஞ்சல் வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெற்ற தேர்தல் பணி அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குப்படிவத்தில் அஞ்சல் வாக்குகளை அளிக்கும்போது பெறப்பட வேண்டிய சான்றிதழை அட்டஸ்டேஷன் எந்த நிலை அரசு அலுவலர்கள் அளித்தால் செல்லுபடி ஆகும் என்பது குறித்து இதுவரை தேர்தல் ஆணையத்தால் தெளிவான வழிகாட்டுதல் வழங்காததால், அஞ்சல் வாக்குகள் செல்லாதவையாக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.