ஒரே நாடு- ஒரே வரி என்ற நோக்கத்தில் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி, 2017-ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ், உற்பத்தி பொருள் விற்பனைக்கு கொண்டு வரும்போது, மூலப்பொருளுக்கு செலுத்தப்படும் வரி, திருப்பி வழங்கப்படும்.
இந்த வரிச் சலுகையைப் பெறுவதற்காக தனியார் நிறுவனம் ஒன்று, போலி ரசீதுகளை தயாரித்து விண்ணப்பித்துள்ளது.
இந்த முறைகேட்டை கண்டுபிடித்த மத்திய சரக்கு மற்றும் சேவை வரி துறையினர், சம்பந்தப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்த விமல், நயன் உள்பட ஒன்பது பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் பிணை கேட்டு ஒன்பது பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நேற்று (பிப்.12) விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நாட்டின் பொருளாதார நலனுக்காக கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை மீறியவர்களுக்கு எதிரான விசாரணையில் நீதிமன்றம் தடையாக இருக்கக் கூடாது எனவும், சுதந்திரமான விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கூறி, முன் பிணை மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், போலி ரசீதுகள் மூலம் வரிச்சலுகையை பெற்று நாட்டின் பொருளாதாரத்தையே பலவீனப்படுத்தும் இந்த மோசடிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் எனவும், மெகா ஊழலாக வளர அனுமதிக்க கூடாது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்