திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள பிடாரிதங்கல் கிராமத்தில் சட்டவிரோதமாக ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வந்துள்ளது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி அந்த கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, குறிப்பிட்ட அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து, சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதைக் கண்டறிந்தால், நீர் எடுத்துச் செல்லும் வாகனங்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட வருவாய் அலுவலரோ, வட்டாட்சியரோ ஆய்வு நடத்தவில்லை எனவும், நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, இரு அதிகாரிகளும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து ஜூலை 18ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் செலுத்தா விட்டால் அடுத்த கட்டமாக அந்த வாகனங்களை முடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தினர்.