தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்கு அளிக்கும் உரிமை உள்ளது.
இதற்காக தேர்தல் பணியில் ஈடுபடும் பொழுது தேர்தல் நடத்தும் அலுவலர் அளிக்கும் படிவம் 12 பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு உரிய அஞ்சல் வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலர் அனுப்பிவைப்பார்.
இதுபோன்று அஞ்சல் துறை மூலம் அனுப்பப்படும் அஞ்சல் வாக்குகள் தங்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை என ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தனர். மேலும் தாங்கள் அளிக்கும் வாக்கானது முறைப்படி வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்று அடைவது இல்லை எனவும் புகார் கூறினர்.
இந்த நிலையில் முதல்கட்ட பயிற்சி வகுப்பின்போது தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் அரசு ஊழியர்களிடம் படிவம் 12 அளிக்கப்பட்டு விவரங்களை பூர்த்தி செய்துபெற்றனர். அதனடிப்படையில் இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெறும் இன்று அவர்களுக்கு அஞ்சல் வாக்கு அளிப்பதற்கான நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்புகிறாரோ அதனை மறைமுகமாக பூர்த்தி செய்து வாக்குப் பெட்டியில் போடுவதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயிற்சி வகுப்புகள் முடிந்த பின்னர் மதியம் 3 மணி முதல் 5 மணி வரை தபால் வாக்குகளை அளிப்பதற்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையத்தால் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.