ஆசியத் தடகளப் போட்டியில் பதக்கம் வென்று ஒரே நாளில் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும், தாங்கள் பிறந்த கிராமத்திற்கும் பெருமை தேடித் தந்தவர்கள் தங்க மங்கை கோமதி மாரிமுத்துவும், வெள்ளி நாயகன் ஆரோக்கிய ராஜீவும். இவர்களுக்கு ஏராளமான நிதியுதவி, பாராட்டுகள், வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.
கோமதிக்கு ஏற்கனவே திமுக ரூ.10 லட்சம், காங்கிரஸ் கட்சி ரூ.5 லட்சம், ரோபோ சங்கர் ஒரு லட்சம், விஜய்சேதுபதி ரூ.5 லட்சம் எனப் பலர் நிதியுதவி அளித்தனர். சமீபத்தில் கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சத்திற்கான காசோலையை அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான பழனிசாமி சென்னையில் உள்ள தனது கிரீன்வேஸ் இல்லத்தில் வைத்து வழங்கினார். அப்போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உடனிருந்தார்.
இந்நிலையில், கோமதிக்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சமும், ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. மேலும், இருவருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து தரும் என்று முதலமைச்சர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.