தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய திமுக உறுப்பினர் சபா. ராஜேந்திரன், 'திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் கெயில் நிறுவனம் சார்பில் விவசாய நிலங்களில் எண்ணெய்க் குழாய் பதிக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.
அதனால் விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்தத் திட்டத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. கர்நாடக அரசு இந்தத் திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்தது போல தமிழ்நாடு அரசும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் அல்லது மாற்று வழியில் பணியைத் தொடர வேண்டும்' என வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்து பேசிய தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், மத்திய அரசின் நில எடுப்புச் சட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உச்சபட்ச இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாகவும், விவசாயிகள் நலனில் தமிழ்நாடு அரசு அதிக கவனம் செலுத்திவருவதாகவும் தெரிவித்தார். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி எந்தவித பாதிப்புமின்றி இந்தத் திட்டத்தை செயல்படுத்துவோம் எனவும் உறுதியளித்தார்.