தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல்கள் போல் வளர்ந்துவருகின்றன. பெற்றோரும், மாணவ, மாணவியரும் ஒவ்வொரு கல்வியாண்டிலும் பொறியியல் கல்லூரிகளை நோக்கி படையெடுக்கின்றனர்.
2010ஆம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் பொது பிரிவினருக்கு (OC) 50 விழுக்காடும், பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினருக்கு 45 மதிப்பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 40 மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்ட, அருந்ததியர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 35 மதிப்பெண்களாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் 2011-12ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான மதிப்பெண் முறையினை மாற்றி அமைத்தது. அதில், பொதுப்பிரிவினருக்கான அடிப்படை மதிப்பெண்ணை 50இல் இருந்து 45ஆக குறைத்தும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மற்றும் பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை 35 லிருந்து 40 மதிப்பெண்களாகவும் உயர்த்தியது.
தமிழ்நாடு அரசு இந்த மதிப்பெண் நிர்ணயத்தை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தமிழ்நாடு அரசை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நிர்ணயித்த மதிப்பெண் முறையை ஏற்க பரிந்துரை செய்தது. அதனை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு 2019-2020 கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கான தகுதி மதிப்பெண்களை நிர்ணயித்து தற்போது அரசாணை பிறப்பித்துள்ளது.
அதில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் நிர்ணயித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் பொதுப்பிரிவினருக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த 50 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு 45 மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தபட்ட மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த 35 மதிப்பெண்களை 40 ஆகவும் உயர்த்தியுள்ளது.
பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்களை உயர்த்தியுள்ளதால் வரும் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் குறையும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.