வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த் வீடு, பள்ளி, கல்லூரிகளில் கடந்த மார்ச் 29, 30 ஆகிய தேதிகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். மேலும், ஏப்ரல் 1, 2 ஆகிய தேதிகளில் துரைமுருகனின் நண்பருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனிலும் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனைகளின்போது ரூ.11.63 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து தேர்தலை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்தது.
இதை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் தேர்தலை ரத்து செய்ய ஒப்புதல் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்தது.
இதனை எதிர்த்து வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணியின் புதிய நீதிக் கட்சியின் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் தலையிட முடியாது எனவும், குடியரசுத் தலைவரின் தீர்ப்பிலும் தலையிட முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ‘நீதிமன்றத்தில் வழக்குப் போட்டால் என்ன நடக்கும் என்று ஏற்கனவே எனக்குத் தெரியும். குடியரசுத் தலைவர் கையெழுத்துப் போட்டுள்ளார்.
அப்புறம் எப்படி நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். குடியரசுத் தலைவர் உத்தரவு போட்டதால் நீதிமன்றம் தலையிடாது என்பது ஏற்கனவே தெரியும். தெரிந்தும் அவர்கள் வழக்குப் போட்டுள்ளார்கள்’ என தெரிவித்தார்.