சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி போதைப்பொருட்களால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் குறித்து மாணவர்களும், இளைஞர்களும் அறிந்துகொள்வதற்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில், திண்டுக்கல்லில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை டிஐஜி ஜோஷி நிர்மல்குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், நலப்பணிகள் இணை இயக்குநர் மாலதி பிரகாஷ், முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கடலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு பதாகைகளை ஏந்திக்கொண்டும் முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர்.
திருவாரூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இப்பேரணியில் மாணவர்கள் போதைப்பொருள் அபாயமானது என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகையை ஏந்தியவாறு திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் தொடங்கி முக்கிய நகர் பகுதி வழியாக நகராட்சி வரை சென்றனர்.
பெரம்பலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிசா மிட்டால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாலக்கரையில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
கோவையில் பேரணியை அம்மாவட்ட கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் வெங்கட்ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் ஊர்க்காவல்படையைச் சேர்ந்தவர்களும் பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகள் ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பாலக்காடு ரோடு, புதிய பேருந்து நிலையம், புது ரோடு என முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனர்.
திருவள்ளூரில் பேரணியை அம்மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகோபால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதுக்கோட்டையில் பேரணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட காவல் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
திண்டுக்கல்லில் வேடச்சந்தூர் காவல்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன.