இது குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ”பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு கடந்த மே 2ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இதில் இன்று மாலை 5 மணி வரை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 442 மாணவர்கள் சேர்க்கை பதிவு செய்துள்ளனர். மாணவர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை நேற்றிரவு 12 மணி வரையில் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் பதிவு செய்த மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண் எனப்படும் ரேண்டம் எண் ஜூன் 3ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையில் 43 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்வதற்கு 1 லட்சத்து 75 ஆயிரம் இடங்கள் இருக்கிறது. ஆனால் 1 லட்சத்து 32 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ளனர். இதனால் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னரே சுமார் 40 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.