பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையிலும், இதுகுறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த பாலாஜி என்ற இளைஞர் கடந்த 13ம் தேதி சென்னையில் சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.
பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஈடுபட்டு வந்த அவர், இன்று மாலை பொள்ளாச்சி வந்தடைந்தார். சுமார் கடந்த இரண்டு நாட்களாக 530 கிலோமீட்டர் கடந்து பொள்ளாச்சி வந்த அவரை பொள்ளாச்சி சேர்ந்த இளைஞர்கள் வரவேற்றனர்.
இது குறித்து பாலாஜி கூறுகையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதைதடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்திற்கு உரிய ஆதாரங்கள் இருப்பதால் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதே நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும், என்றார்.