நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியை அச்சுறுத்தும் விதமாக கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியின் உத்தரவின் பேரிலும், கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியின் அறிவுரையின் பேரிலும், வக்கீல் செந்தில் என்பவர் கட்சியினருடன் மாவட்ட ஆட்சியரின் இல்லத்துக்குச் சென்றனர்.
அங்கு தகராறு செய்யும் நோக்கத்துடன் வீட்டுக்குள் நுழைய முற்பட்ட போது, வழக்கறிஞர் செந்தில் என்பவரை செல்ஃபோனில் தொடர்பு கொண்டு தேர்தல் பிரசாரம் தொடர்பான புகாரை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து அளிக்க அறிவுறுத்தினேன்.
ஆனால், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து எனது உயிருக்கும், எனது குடும்பத்துக்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் வீட்டுக்குள்ளேயே நுழைய முயன்றனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு வந்து பாதுகாப்பு வழங்கினார்.
இது தொடர்பாக, தேர்தல் பணி செய்ய விடாமல் தடுக்கும் நோக்கில் செயல்படுவதாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அரவக்குறிச்சி வேட்பாளரான தன்னை காவல்துறை கைது செய்யாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி உட்பட 3 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்ரமணியம், வாரத்துக்கு 3 நாட்கள் (திங்கள், புதன், வெள்ளி) சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி உட்பட 3 பேரும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் முன் பிணை வழங்கி உத்தரவிட்டார்.