அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஆனால் அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயித்த கட்டணம் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிகமாக இருந்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலன் கருதி 25 விழுக்காட்டிற்கு மேல் கட்டணத்தை குறைத்து ஒப்புதல் அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு முதல் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி.இ., பி.டெக்., பி.ஆர்க். பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்கள் 46 ஆயிரத்து 60 ரூபாய் கல்விக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இந்தக் கல்விக் கட்டணத்தில் ஒருமுறை மட்டுமே செலுத்தக்கூடிய கட்டணம் 7,060 ரூபாயும், மாணவர்களுக்கு மீண்டும் திருப்பித் தரக்கூடிய வைப்புத்தொகை ஒன்பது ஆயிரமும் (ஆய்வகத்தில் பொருட்கள் சேதமடைந்தால் அதற்கான வைப்புத்தொகை) இந்தக் கட்டணத்தில் உள்ளது. மாணவர்களுக்கு ஒரு பருவத் தேர்விற்கு 15 ஆயிரம் வீதம் இரண்டு பருவத்திற்கு ஆண்டிற்கு முப்பதாயிரம் மட்டுமே கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் எம்.இ., எம்.டெக்., எம்.பில். ஆகிய முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கு முதலாம் ஆண்டு செலுத்தக்கூடிய கல்விக் கட்டணம் மட்டும் 55 ஆயிரத்து 860 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒரு பருவத்திற்கு 20 ஆயிரம் வீதம் இரண்டு பருவத் தேர்விற்கு ஆண்டிற்கு 40,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எம்.ஆர்க்., எம்.ப்ளான். ஆகிய பட்டப்படிப்புகளுக்கு முதலாம் ஆண்டு மாணவர்கள் செலுத்தக்கூடிய கல்விக் கட்டணம் 65 ஆயிரத்து 860 எனவும், மற்ற ஆண்டுகளுக்கு ஒரு பருவத்திற்கு 25 ஆயிரம் என ஆண்டிற்கு இரண்டு பருவத்திற்கு 50 ஆயிரம் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.ஏ. மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் முதலாம் ஆண்டிற்கு 59 ஆயிரத்து 190 எனவும், ஒவ்வொரு பருவத்திற்கும் 21 ஆயிரத்து 515 ரூபாய் வீதம் ஆண்டிற்கு 43 ஆயிரத்து 30 ரூபாய் கட்டணமாகவும், எம்.சி.ஏ. படிக்கும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு கட்டணமாக 52 ஆயிரத்து 90 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
![அண்ணா பல்கலை. கல்வி கட்டணம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-anna-university-new-fees-stucture-script-7204807_12072019072423_1207f_1562896463_1059.jpg)
ஒவ்வொரு பருவத்திற்கும் 17 ஆயிரத்து 965 வீதம் ஆண்டிற்கு இரண்டு பருவத்திற்கும் சேர்த்து 35 ஆயிரத்து 930 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை செலுத்தும் கட்டணம், மீண்டும் திருப்பிப் பெறக்கூடிய வைப்புத்தொகை ஆகியவற்றை மாணவர்கள் கல்லூரியில் முதலில் செலுத்தும் ஆண்டு மட்டுமே கட்ட வேண்டும். அதன்பின்னர் மாணவர்கள் பருவத் தேர்விற்கான கல்விக் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது.
தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு அண்ணா பல்கலைக்கழகம் உயர்த்திய கட்டணத்தை ஏற்காமல் 25 விழுக்காடு குறைத்துள்ளது என கல்வித் துறை உயர் அலுவலர் தெரிவித்துள்ளார்.