அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும், ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காணப்பட்டவரின் தலைமையின் கீழ் கட்சியும் ஆட்சியும் செல்ல வேண்டும் என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறியிருந்தார். அவரது கருத்துக்கு குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரனும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். இதனால் அக்கட்சிக்குள் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காணப்பட்டவர் ஓபிஎஸ்தான். அதுமட்டுமின்றி 37 தொகுதிகளில் தோற்ற அதிமுக தேனியில் மட்டும் வென்றதன் மூலம் அவர் தனது ஆளுமையை நிரூபித்துவிட்டார் என அவரது ஆதரவாளர்கள் பரவலாக பேசத் தொடங்கியிருக்கின்றனர்.
எனவே, அதிமுகவில் தர்ம யுத்தம் ’2.0’ ஆரம்பமாகுமா என்ற கேள்வி அக்கட்சி தொண்டர்களின் கேள்வியாக இருந்தாலும், அவ்வாறு எதுவும் நடக்காமல் சுமுகமாக பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.