தமிழ்நாட்டிலுள்ள கிராமப்புற மாணவர்களும் கல்வி பயிலவேண்டும் என்பதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால் தற்போது அரசு பள்ளிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்களின் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது.
இந்நிலையில் தொடக்கக் கல்வித்துறை எடுத்த கணக்கெடுப்பில், 45 பள்ளிகளில் ஒரு மாணவரும் இல்லை, 76 பள்ளிகளில் தலா ஒரு மாணவரும், 82 பள்ளிகளில் தலா இரண்டு மாணவர்கள் என மொத்தம் ஆயிரத்து 848 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாகவே பயின்று வருகின்றனர்.
மத்திய அரசின் விதிமுறைகளின்படி மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள வேறு பள்ளியில் சேர்க்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த பள்ளியின் பட்டியல்களை இன்று மாலைக்குள் பெறுவதற்கு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆயிரத்து 848 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் மாணவர்கள் இல்லாத பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். பின்னர் அந்தப் பள்ளிகள் அப்படியே படிப்படியாக மாணவர்கள் இல்லை என்ற காரணத்தைக் காட்டி நிரந்தரமாக மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.