தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே தேர்தல் பறக்கும் படையினர் அதிதீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள், வேட்பாளர்களின் இல்லம், அலுவலகத்தில் சோதனை நடத்தி பணம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துவருகின்றனர்.
அதேவேளையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளிலும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னை ஆவடி அருகே சுங்கச்சாவடியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு வந்த மினிலாரியை சோதனையிட்டதில் அதில் ஏராளமான தங்கம் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து முழுமையாக சோதனையிட்டதில் அதிலிருந்த ஒவ்வொரு பெட்டியிலும் 25 கிலோ தங்கம் இருந்தது.
ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 381 கிலோ தங்கம் அந்த வாகனத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான ஆவணங்களை வாகன ஓட்டுநரிடம் கேட்டுள்ளனர்.
ஆனால் வாகனத்தை ஓட்டிவந்தவர்கள் ஆவணம் ஏதும் இல்லை, திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
உரிய ஆவணம் இல்லாததையடுத்து நகைகளை பறிமுதல் செய்த பறக்கும்படையினர், பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுசென்றனர். இந்த நகைகள் உண்மையாகவே திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு கொண்டுசெல்லப்பட்ட நகைகளா அல்லது வேறு எங்கேனும் கொண்டுசெல்லப்பட இருந்ததா என்ற கோணங்களில் விசாரணை தற்போது நடைபெற்றுவருகிறது.