10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுத் துறை இன்று காலை 9.30 மணிக்கு வெளியிட்டது.
கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டன.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 12,546 பள்ளிகளில் இருந்து ஒன்பது லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவர்களும், தனித்தேர்வர்களாக 38 ஆயிரத்து 176 மாணவர்களும் தேர்வினை எழுத மூன்றாயிரத்து 731 தேர்வு மையங்களில் தேர்வினை எழுத பதிவு செய்திருந்தனர். இதில் நான்கு லட்சத்து 68 ஆயிரத்து 570 மாணவிகளும் நான்கு லட்சத்து 69 ஆயிரத்து 289 மாணவர்களும் தேர்வு எழுதினர்.
2018ஆம் ஆண்டு 94.50 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு 95.2 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட 00.70 விழுக்காடு தேர்ச்சி இந்தாண்டு அதிகரித்துள்ளது.
இதில் 98.53 விழுக்காடு தேர்ச்சியுடன் திருப்பூர் முதலிடமும், 98.48 விழுக்காடு பெற்று ராமநாதபுரம் இரண்டாவது இடத்திலும், 98.45 நாமக்கல் மூன்றாவது இடமும் பிடித்துள்ளன.
மேலும் 97 விழுக்காடு மாணவிகளும் 93.3 விழுக்காடு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆறாயிரத்து 100 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் செயல்படும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் 92.48 விழுக்காடும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 94.53 விழுக்காடும், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மாணவர்கள் 99.05 விழுக்காடும், இருபாலர் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் 95.42 விழுக்காடும், பெண்கள் பள்ளியில் பயின்ற மாணவியரில் 96.89 விழுக்காடும், ஆண்கள் பள்ளியில் பயின்ற மாணவர்களில் 88.94 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல் பாடவாரியாக பயின்ற மாணவர்களில் மொழிப்பாடத்தில் 96.12 விழுக்காடும், ஆங்கிலப் பாடத்தில் 97.35 விழுக்காடும், கணக்குப் பாடத்தில் 96.46 விழுக்காடும், அறிவியல் பாடத்தில் 98.56 விழுக்காடும், சமூக அறிவியல் பாடத்தில் 97.07 விழுக்காடும் தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.