அரியலூர் மாவட்டம் நக்கம்பாடி கிராம விவசாயி ஒருவரின் நிலத்தில் அரச மரத்துடன், பனை மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அந்த மரங்களை விவசாயி வீடு கட்டுமான பணிகளுக்காக அகற்ற முடிவுசெய்தார்.
அதனை அறிந்த சோலைவனம் இளைஞர்கள் மரங்களைக் காப்பாற்ற எண்ணினர். அதனால் அவர்கள் ஜேசிபி, பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் மரங்களை வேருடன் பிடுங்கி, அங்கிருந்து லாரி மூலம் 45 கி.மீ. தொலைவில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கொண்டுசென்று நட்டனர்.
இது குறித்து அந்த இளைஞர்கள் கூறுகையில், "சாலை விரிவாக்கம், புதிய கட்டுமான உள்ளிட்ட திட்டங்களுக்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து நிற்கும் மரங்கள் சில நிமிடங்களில் அகற்றப்படுகின்றன. சர்வசாதாரணமாக வேரோடு வெட்டி வீழ்த்தப்படுகின்றன. சில நிமிடங்களில் அரை நூற்றாண்டு கால மரம் அகற்றப்படுவது என்பது மிகப் பெரிய முட்டாள்தனம்.
அதுமட்டுமல்லாமல் பனை மரம் சில ஆண்டுகளில் வளரக்கூடியது அல்ல; குறைந்தது 10 ஆண்டுகள் ஆனால்தான் அதில் நுங்கு வளரும். அம்மரத்தில் உள்ள அனைத்தும் பயன்படக்கூடிவை, மருத்துவ குணம் வாய்ந்தவை. அவ்வாறு இருக்கையில் அத்துடன் அரச மரமும் சேர்ந்து வளர்ந்துவந்ததால் அதனை வெட்டி வீழ்த்த மறுப்பு தெரிவித்தோம்" எனக் கூறினர்.
மேலும் அவர்கள், "அதனால் ஜேசிபி, பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் மரங்களை வேருடன் பிடுங்கி, அங்கிருந்து லாரி மூலம் 45 கி.மீ. தொலைவில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கொண்டுசென்று நட்டுள்ளோம். அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் வெகுவாகப் பாராட்டினார்" என்றனர்.
இதையும் படிங்க: கொளுத்தும் வெயிலின் சூட்டை தணிக்கும் பனை நுங்கு - குவியும் மக்கள்!