"நீரின்றி அமையாது உலகு.." என்ற வள்ளுவரின் குறளை படித்தவர்கள் யாரும் அதை உணராது போனதால், நாம் வாழும் மண்ணும் நீரின்றி உலர்ந்து போனது. உலகில் மூன்றாவது போரொன்று நடந்தால் அது தண்ணீர் பிரச்னையால் தான் நடைபெறும் என்று ஆய்வாளர்கள் தங்களுடைய ஆய்வறிக்கையில் சமர்பித்த போதும் அதற்கான பதற்றமும் நீரை சேகரிப்பதற்கான பற்றும் நம்மிடம் இல்லை. நம்முடைய தேவையை பற்றியே சிந்தித்த நம் மூளை, நம் தலைமுறைகளைப் பற்றி சிந்திப்பதற்கு இடம் தராமல் போனது. சமீபகாலமாகவே, நம்மை பாதிக்கும் தண்ணீர் பஞ்சம் அடுத்ததடுத்து பொய்த்து போன மழையால், நீர் சேகரிப்பின் தேவையை நமக்கு உணர்த்தியது. "மாதம் மும்மாரி பெய்யும் மழை" என்ற சொல்லாடல் அர்த்தமிழந்து மும்மாரி பெய்த மழை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட பெய்யத் தவறியது. அப்போது தான் மழைநீர் சேகரிப்பை பற்றிய விழிப்புணர்வு விழித்து கொண்டது. அதே நேரத்தில் ஆங்காங்கு இருந்த மழை நீர் தேங்குவதற்கான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டு பிறகு எங்கு போய் மழை நீரை சேகரிப்பது? என்ற எண்ணமும் நம் மூளைக்கு எட்டியது. ஏரியை தூர்வரலாம் என்று நினைத்த போது பணத்தின் தேவையும் அரசின் தயவும் தேவைப்பட்டது. ஆனால் ஒரு சில பகுதிகளில் அரசை எதிர்பாராமல் பொதுமக்களே தூர்வாரும் பணியை துவங்கினார்கள். அப்படிபட்ட ஒரு இடத்திற்கு தான் இந்த கட்டுரையும் நம்மை அழைத்துச் செல்கிறது.
தமிழ்நாட்டின் வறட்சியான மாவட்டங்களில் ஒன்றாக அரியலூர் மாவட்டம் உள்ளது. கடந்த ஆண்டை விட இவ்வாண்டு 30 அடிக்கும் கீழாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது. இதற்கு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள கொள்ளிடம் ஆற்றிலிருந்து அதிகளவில் நடந்த மணல் சுரண்டலும் அம்மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகளுக்காக தோண்டப்பட்ட சுரங்கங்களும் பருவநிலை மாற்றமும் முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் விவசாயம் செய்யவும் குடிநீருக்காகவும் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தங்களது கிராமத்தின் நீராதாரத்தை பாதுகாக்கவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெற்றியூர் கிராம மக்கள், அக்கிராம இளைஞர்களுக்கு துணை நின்று கிராமத்தின் நீர் ஆதாரமாக உள்ள ஏரியை ஆழப்படுத்தி வருகின்றனர்.
இந்த கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் சுமார் நான்கு மணி நேரம் மின் மோட்டார் இயக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி நிரம்பி பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இவ்வாண்டு 8 மணி நேரம் மின் மோட்டாரை இயக்கினால் மட்டுமே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் கிராமத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவது கிராம மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் பிரச்சனை தங்கள் கிராமத்திற்கும் வந்துவிடக்கூடாது என வெளிநாடு, வெளி மாவட்டங்களில் வேலை செய்து வரும் அந்த கிராமத்தின் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் கிராமத்தின் நீராதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு அறிவுறுத்தினர். இதனையடுத்து கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கிராமத்தில் உள்ள ஏரியில் புதர் போல் மண்டிக் கிடந்த சீமைக்கருவேல மரங்களையும் முட்புதர்களையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்மேடாக காட்சியளித்த ஏரியில் மழை பெய்தால் நீர் தேங்காது என அறிந்து ஏரியை ஆழப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை ஏற்றுக்கொண்ட கிராம முக்கிய நிர்வாகிகள் இதுகுறித்து கிராம மக்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டு அரசை எதிர்பார்க்காமல் ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் பங்குதொகை நிர்ணயம் செய்து வசூலித்து ஏரியை தூர்வார துவங்கினர். மேலும் கிராமத்தைச் சேர்ந்த வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாட்டில் இருப்பவர்களும் நிதி உதவி செய்கிறோம் எனக் கூறி தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். மேலும் 100நாள் வேலை திட்டத்தில் வேலைசெய்பவர்கள் தங்களது ஒரு வார சம்பளத்தை தருவதாக கூறினர். இதனையடுத்து கிராம முக்கியஸ்தர்கள் அடங்கிய ஒரு குழு அமைத்து அந்தக் குழுவின் மூலம் ஏரியை ஆழப்படுத்தும் பணியை தொடங்கினர். இதனையடுத்து 2 பொக்லைன் வண்டியை கொண்டு ஏரியை ஆழப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. ஏரியில் வெட்டப்படும் மண்ணை கொண்டு ஏரி கரைகளை பலப்படுத்தினர். இந்த மண்ணைக் கொண்டு கிராமத்தில் தாழ்வான பகுதிகளில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடிய பகுதிகள் என கண்டறிந்து அப்பகுதிகளில் மேடாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமத்தில் உள்ள ஏரிகளையும் வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என பல்வேறு இடங்களில் இருந்து இளைஞர்களும் அரசியல் அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் இக்கிராம இளைஞர்களும் பொதுமக்களும் இணைந்து அரசை எதிர்பார்க்காமல் தங்கள் சொந்த நிதியை கொண்டு ஏரியை ஆழப்படுத்தி வரும் இச்செயல் பாராட்டுக்குரியது.
இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறும்போது, இந்த ஏரியை ஆழப்படுத்தி தர வேண்டும் எனப் பல முறை அரசு அலுவலர்களிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் கோரிக்கை விடுத்தும் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்ட இந்த ஏரி தற்போது மண்மேடாக இருந்ததை ஆழப்படுத்தி கிராம மக்களே முன்வந்து வீட்டிற்கு ஆயிரம் ரூபாய் பங்களிப்பு செய்து தற்பொழுது ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 8 லட்சம் வரை செலவு செய்ய முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. ஆனால் இத்தொகை ஏரி முழுவதையும் ஆழப்படுத்த போதுமானதாக இருக்காது எனவே ஏரியில் மீதமுள்ள பகுதியையும் ஆழப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் ஏரிக்கு வரக்கூடிய தண்ணீர் ஏரியில் தேங்கும் வகையில் தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இது போன்று அனைத்து கிராம மக்களும் தாங்களே முன்வந்து அந்தந்த கிராம ஏரிகளை தூர்வாரினால் வருங்காலத்தில் தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்பதற்கு எங்கள் கிராமம் முன்னுதாரணமாக இருக்கும் என பெருமிதத்துடன் கூறினர்.