அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் வசித்து வருபவர் முருகன். இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளான திவ்யதர்ஷினியின் மஞ்சள் நீராட்டு விழா ஊரடங்கு உத்தரவையடுத்து எளிமையான முறையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் தங்களை கரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்க குடையுடனும், முகக் கவசம் அணிந்து கொண்டும் வந்தனர்.
அப்போது, ஊராட்சிமன்றத் தலைவர் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் முகக் கவசங்களை இலவசமாக கொடுத்தார். மேலும் கைகளை சுத்தப்படுத்துவதற்கு கிருமி நாசினியையும் அளித்தார்.
முன்னதாக வீட்டின் முன்புறம் வைத்துள்ள மஞ்சள், வேப்பிலை கலந்த கிருமிநாசினி நீரைக்கொண்டு மக்கள் தங்களை சுத்தப்படுத்திக்கொண்டனர்.
சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக பொதுமக்கள் அனைவரும் குடையுடன் வந்து வாழ்த்திய சம்பவம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
இதையும் பார்க்க:குழுமாயி அம்மன் கோயில் குட்டிக்குடி திருவிழா