அரியலூர்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமை வகித்தார். இதில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, மின்சாரத்துறை, கால்நடைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத்துறை தொடர்பான கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர்.
அப்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 50 வரை வசூல் செய்யப்படுகிறது என்றும் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் பால் கொள்முதல் விலையை உயர்த்திடக் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, பயிர் காப்பீட்டுத் தொகை காலதாமதம் இன்றி விவசாயிகளுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர்கள், நீர் வழி தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.
பின்னர் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பதற்குப் பட்டா சிட்டா அடங்கல் போன்ற குறிப்புகள் தேவைப்படுகிறது எனக் கூறிய விவசாயிகள், மேற்கூறிய குறிப்புகளைப் பெறுவதற்குக் கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளர் போன்றோர் லஞ்சம் கேட்பதாகக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரிடம் கேட்டுக்கொண்டனர்.
இதனைக் கேட்ட மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, குறிப்பிட்ட அலுவலர் லஞ்சம் வாங்கினார் என்று நேரடியாக புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் பொத்தாம் பொதுவாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க இயலாது என்றார். இதனால் விவசாயிகள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பினர். இதனால் கூட்ட அரங்கில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகளிடமிருந்து மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, சம்பந்தப்பட்ட துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரை செய்தார்.
இது குறித்த விசாரணையின்போது ஆண்டிமடம் வட்டம், திருக்களப்பூர், கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் பொற்செல்வி என்பவர் சிட்டா அடங்கல் வழங்குவதற்கு விவசாயிகளிடமிருந்து ரூ.1000 லஞ்சம் கேட்பதாக வீடியோ ஆதாரம் வரப்பெற்றது. இதை தொடர்ந்து, மேற்படி திருக்களப்பூர் கிராம நிர்வாக அலுவலர் பொற்செல்வி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்து பயணம்.. பதைபதைக்க வைக்கும் காட்சி!