புதுச்சேரியில் கரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதன் காரணமாக சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில், புதுச்சேரி சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைத்து சங்க நல கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக்கோரி புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஊரடங்கால் வாகனம் இயங்காமல் உள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு ஆறு மாத காலம் உதவி தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும், ஆறு மாத காலத்திற்கு சாலை வரியை ரத்து செய்து வாகன கடனுக்கான வட்டியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதை புதுச்சேரி அரசு உடனடியாக நிறைவேற்றக்கோரி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.