சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரான தொல். திருமாவளவன் அரியலூரில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ’நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் பட்டியலின, பழங்குடி, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறை படுத்தவேண்டும் எனவும்; உள்ளாட்சிகளில் துணைத் தலைவர்கள் பதவிகளிலும் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை அகற்ற, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும், இதற்கு மத்திய, மாநில அரசுகள் புதிய நவீன தொழில் நுட்பங்களை கையாள முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதேபோல் மத்திய அரசுக்கு ஆதரவான வழக்குகளில் விரைந்து தீர்ப்பு அளிப்பது, எதிரான வழக்குகளை கிடப்பில் போடுவது வாடிக்கையாக உள்ளது. அயோத்தி வழக்கில் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து விரைந்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பாபர் மசூதி இடித்த குற்றவாளிகள் குறித்து தீர்ப்பளிக்காதது வேதனையாக உள்ளது.
தமிழ்நாட்டில் கிராமங்களை இணைக்கும் வகையில், ஆயிரக்கணக்கான சாலைகள் போடப்படாத நிலையில் நான்கு வழிச்சாலை, எட்டு வழிச்சாலைகளுக்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை கொடுப்பது ஏன்?' எனக் கேள்வி எழுப்பிய அவர், 'இவ்வகையான சாலைகள் பெரிய தொழிலதிபர்கள் விமான நிலையத்திற்கும், துறைமுகத்திற்கும் செல்லவே பயன்படும் வகையில் அமைக்கப்படுவதாக' குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க:
பேத்தியிடம் அத்துமீறிய தாத்தா: அடித்துக் கொலை செய்த மருமகன்!