அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியில் பாமகவைச் சேர்ந்தவர்கள், வேறு பிரிவினரைச் சரமாரியாகத் தாக்கியும், வீடுகளை உடைத்தும் அராஜகத்தில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின், சிகிச்சை முறைகளைக் கேட்டறிந்தார் விசிக தலைவர் திருமாவளவன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பாட்டாளி மக்கள் கட்சியின் தவறான அணுகு முறையைக் கையாண்டு வருகிறது. அச்சமூகத்தையே அதன் தலைவர் இயக்கி வருகிறார். இதனால் சமூகத்தில் இளைஞர்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும். பொன்பரப்பி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டும் அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட தேர்தல் அலுவலரிடம், பொன்பரப்பி கிராமத்தில் 4 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி மனு அளித்துள்ளேன்.
ஆனால் அவ்வாறு நடத்துவதற்கான சூழல் இல்லை எனவும் அவ்வாறு நடத்த இயலாது என மாவட்ட தேர்தல் அலுவலர் விஜயலட்சுமி கூறியதாகவும், இதுகுறித்து சட்டக் கலந்துரையாடல் நடத்தப்பட்டு, அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். மேலும், வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் எனக் கூறினார்