அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள நைனார் ஏரி, சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த ஏரிக்கு மழைக்காலங்களில் உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து மழை நீரானது வடிகால் ஓடை வழியாகவும் காட்டுப் பகுதிகளின் வழியாகவும் வந்து கலக்கிறது.
இந்த ஏரியின் கரையில் உள்ள இடுகாட்டிற்கு, ஏரியின் கரையைப் பயன்படுத்தி காலம் காலமாக இறந்தவரின் உடலை எடுத்துச்சென்று வருகின்றனர், அந்த ஊர்ப் பொதுமக்கள்.
இதுகுறித்து கடந்த 2004ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சாலை மறியல் உள்ளிட்டப் பல்வேறு போராட்டங்கள் மூலம் அப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கையைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சென்ற ஆண்டு இறந்தவரின் உடலைக் கழுத்தளவு நீரில் எடுத்துச் சென்றதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்து, உடனடியாக பாலம் மற்றும் சாலை அமைத்துத் தரப்படும் என உறுதி அளித்திருந்த நிலையில், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.
தற்போது கூட பெய்த கனமழையின் விளைவாக, அக்கிராமத்தில் இரண்டு பேரின் உடல்களை கழுத்தளவு இருக்கும் நீரின் வழியாக எடுத்துச் சென்றுள்ளனர். இது பற்றி அக்கிராம மக்களிடம் விசாரித்த போது பல ஆண்டுகளாக இப்பிரச்னை குறித்துப் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனவும் வேதனையுடன் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஏரியில் கழுத்தளவு நீரில் சடலத்தை தூக்கிச் சென்ற மக்கள் - மயானத்திற்குப் பாதை இல்லாத அவலம்!